தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலமாதலால் 'எறும்பியூர்' என்று பெயர் பெற்றது. கோயில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு போட்டியில் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இந்த குன்று என்று தலபுராணம் கூறுகிறது.
மூலவர் 'எறும்பீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். சிறிய அளவில் புற்று வடிவில் வடபக்கம் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகின்றார். எறும்பு புற்று என்பதால் எண்ணெய் காப்பு சாத்தப்படுகிறது. ஆவுடைக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறுகிறது. விசேஷ நாட்களில் மட்டும் கவசம் சாத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது.
அம்பாள் 'நறுங்குழல் நாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சியளிக்கின்றாள். வெளிப்பிரகாரத்தில் அம்மனுக்கு தனி சன்னதி இருக்கிறது. அம்மன் சன்னதியின் நுழைவாயில் அருகே ஆதியில் இருந்த அம்பாள் திருவுருவச் சிலை உள்ளது.
பிரகாரத்தில் செல்வ விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. சிவகாமி உடனுறை நடராஜப் பெருமான் உள்ளார்.
மகாவிஷ்ணு, பிரம்மா, நைமிசாரண்ய முனிவர்கள், தூஷணன் என்னும் அசுரன் ஆகியோர் பூஜித்த தலம். வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|